Friday, December 17, 2010

மனக்கீறல்கள்

மனக்கீறல்கள்

நான் எனது பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அயல் தேசம் வந்து ரொம்ப வருஷம் கழித்து மீண்டும் எனது ஊருக்கு சென்றால் அப்போதுதான் எனக்கு புரிந்தது எனக்கும் வயதாகி விட்டது என்று. என்னோடு படித்த விளையாடிய நண்பர்களை பார்க்கும் போது எனக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது.

உள்ளே இருந்து ஒரு குரல் டேய் நீயும் பழைய மாடல் வண்டிதான் ரொம்ப ஆட்டம் போடாதே என்று.

ஒரு முறை ஒரு கடையில் எனது வண்டியை நிறுத்தும் போது, ஒரு வயது முதிர்ந்த தோற்றத்தில் ஒரு மனிதர் என்னிடம் வந்து "ஒரு நிமிஷம் உங்களிடம் பேசலாமா" என்றார்.

நானும் எதோ உதவி கேட்கத்தான் நம்மிடம் வந்து இருக்கிறார் என்று "சரி சொல்லுங்கள்" என்றேன். அவர் எனது பெயர் எனது அப்பாவை பற்றி மற்றும்  நான் படித்த பள்ளி விபரங்களை சொன்னார். சொல்லிவிட்டு "நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரியா?"  என்றார்.

ரஜினி சொன்னது போல "எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்தி விட்டது" நானும் 

 "ஆமாம் சரிதான் ஆனால் நீங்கள் யார் என்று தெரிய வில்லை"

"டேய் குமாரு நான்தான்டா   உன் கூட நாலாம் கிளாசில் இருந்து பத்தாவது வரை ஒண்ணா படிச்சா ரமேஷ் டா."

திரும்பவும் ரஜினி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அவனுக்கு (அவருக்கு) ரொம்பவும் வயதாகி விட்டதா இல்லை எனது பிம்பம் வேறா ?

அவன் ரொம்ப ஆச்சிரியதுடன் கேட்டான்

"என்னடா மச்சான் உனக்கு மட்டும் வயசாகவில்லை அப்போ பாத்த மாதிரியே இருக்கடா, அதனாலதான் உன்னை பார்த்தவுடன் கேட்டேன்."

முதல் பத்து நிமிஷம் அவனை வாடா போடா அப்படினு கூப்புட ரொம்ப சங்கடமா இருந்தது அப்புறம் இருபது வருஷம் பின்னாடி பறந்து போயாச்சு.





அப்போது தான் நினைத்து பார்த்தேன் நாற்பத்தி எட்டு வயதில் கிடைத்த இந்த அனுபவம் இன்னும் சில வருடங்கள் கழித்து கிடைத்து இருந்தால்  அவன் அவனது பேர பிள்ளைகள் பற்றியும் நான் எனது பிள்ளைகளின் கல்யாணத்தை பற்றியும் பேசி இருப்போம். (சாரி பாஸ் எனக்கு திருமணம் ரொம்ப லேட்) 


"சரி மச்சான் அப்புறம் நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வா" சொல்லிவிட்டு வண்டியே கிளப்பினேன்

மாலை நேரம் அதே காற்று, டீ கடையில் அதே கூட்டம் , அதே இளையாராஜா பாடல் எனக்கு அப்போது இறந்து போன என் அம்மா வீட்டில் காத்து இருப்பது போலவும் ... 

என்னை எதிரியாய் பார்க்கும் எனது சகோதிரன் வாசலில் நண்பர்களுடன் சிரித்து பேசும் சத்தமும்... 

என்னுடன் போசாமல் மும்பை இல் இருக்கும் என் இளைய சகோதிரி வீட்டில் படித்து கொண்டு இருப்பாள் என்றும்.....

ஊரில் இருந்து வந்திருக்கும் இறந்து போன என் தாய்மாமா அவரை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேல் ஓங்கியது.

நேர இயந்திரம் இல்லமெலெ நம்மால் அந்த காலத்திற்குள் செல்லமுடிகிறது.

மாய தோற்றம் ... இவை எதுவுமே இப்பொது அங்கு இல்லை...

நிஜம் என் கண் முன்னே எனது வீடு எனது  மனைவி என் பிள்ளைகள் அதுதான் நிஜம் அவர்களுக்கு நான் மட்டுமே உலகம்.

நிகழ் காலம் நம்மை கடந்து போய் அது  கடந்த காலம் ஆகும் ஆனால் கடந்த காலம் நம்மை விட்டு கடந்து போவது இல்லை. ஒரு நண்பனோ ஒரு பாடலோ ஒரு பழகிய தெருவோ எதோ ஒன்று நம்மை மீண்டும் அதற்குள் அழைத்து போகும், அப்போது  அதை நீங்களும் உணர்ந்து அனுபவித்து பாருங்கள்.

"மேகம் கருக்குது மழை வர பாக்குது "  இதோ மீண்டும் ராசா அழைக்கிறார் 30 வருடம் கடந்து போக .....


ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எனக்கு வயதாகிறது என்பதை என்னால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னை விட என் மனைவி அவளால் மனதால் நினைத்து கூட பார்க்க முடியாது. உண்மைகள் என்றுமே கசப்பானவை.   வேற வழி இல்ல நண்பா